காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை துாய்மைப்படுத்த... 45 நாள் கெடு!: தடைக்காலத்தை பயன்படுத்த தீர்ப்பாயம் அறிவுரை
சென்னை: காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், பசுமை தீர்ப்பாயம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் பல்லுயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளை அகற்றி, 45 நாட்களில் துாய்மைப்படுத்த, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கூட்டுக்குழு அமைக்கவும் அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் முக்கியத்துவம் வாய்ந்த காசிமேடு துறைமுக பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள், மரக் கழிவுகள், தெர்மாகோல் உள்ளிட்டவை குவிந்துள்ளன. இதனால், அப்பகுதி குப்பை தீவாக காட்சி அளிக்கின்றன. காசிமேடு முதல் எண்ணுார் வரை கடற்கரை சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, கடல்வாழ் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. கடந்த 25ம் தேதியும் படத்துடன் செய்தி வெளியானது.
இந்த செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மீன்வளத்துறை, சென்னை மீன்பிடி துறைமுக மேலாண்மை குழு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது.
தொற்று அபாயம்
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
காசிமேடு மீன்பிடித் துறைமுகம் குப்பை தீவாக மாறியுள்ளது தொடர்பான வழக்கு, தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மீண்டும் குப்பை தீவு உருவாகி உள்ளதாகவும், இதனால், தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 25ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
கிழக்கு கடற்கரையில் ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை, 60 நாட்கள் மீன்பிடி தடை காலம். மீன் இனப்பெருக்கத்தைப் பாதுகாத்தல், கடல் வளங்களை பேணுதல் ஆகியவற்றுக்காக ஆண்டுதோறும் இந்த தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடைக்காலத்தை மீன்பிடித் துறைமுகத்தை துாய்மைப்படுத்தவும், படகுகள் பராமரிப்பு, பழுதுபார்ப்பின்போது உருவாகும் குப்பை கழிவுகளை அகற்றவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே 15 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், மீதமுள்ள 45 நாட்களில் துறைமுகத்தை துாய்மைப்படுத்தலாம்.
கூட்டுக் குழு
இதற்காக, சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில், மீன்வளத்துறை இயக்குநர், சென்னை துறைமுக அறக்கட்டளை ஆணைய தலைவர், காசிமேடு மீன்பிடித் துறைமுக மேலாளர் ஆகியோரை கொண்ட கூட்டுக் குழுவை அமைக்கலாம். இப்பணியில் மீனவர்களையும் ஈடுபடுத்தலாம்.
முதற்கட்டமாக மீன்பிடித் துறைமுகம் முழுதும் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றலாம். மீண்டும் குப்பை கொட்டப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதற்காக ஒரு பயனுள்ள மேலாண்மை திட்டத்தை வகுத்து, அதை கூட்டுக்குழு செயல்படுத்த வேண்டும்.
தனியார் பங்களிப்புடன் சூரிய சக்தியில் இங்கும் குளிரூட்டும் அறைகளை, சென்னை துறைமுக அறக்கட்டளை அமைக்கலாம். துறைமுகத்தை துாய்மையாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தலாம். குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வழக்கின் அடுத்த விசாரணை தேதியான வரும் ஜூன் 3ம் தேதிக்குள், கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.