(டிட் பிட்ஸ்) மைக்ரேன் பிரச்னைக்கு தீர்வு என்ன?

பொதுவாக நாம் அனைவருமே சாதாரணமாக அடிக்கடி சந்திக்கும் உடல் ரீதியான பிரச்னை எது என்றால் அது தலைவலிதான். இந்த தலைவலியில் 300 வகைகள் உள்ளன. இதில் ஒரு வகையும் முக்கியமானதாகவும் பார்க்கப்படுவது மைக்ரேன் தலைவலியாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படுகிற தலைவலி. இது ஏன் ஏற்படுகிறது என்றால், பரம்பரை வழியாக வருகிறது. குடும்பத்தில் யாருக்கேனும் மைக்ரேன் இருந்திருந்தால், மரபணு வழியாக அடுத்தத் தலைமுறைக்கும் வரும். இதற்கு வேறு எந்த காரணமும் இருக்காது. இது ப்ரைமரி தலைவலி என்று மருத்துவ உலகில் சொல்லப்படுகிறது இந்த ப்ரைமரி தலைவலியிலேயே நான்கு வகைகள் உள்ளன. இதில் முக்கியமாக பார்க்கப்படுவது மைக்ரேன் மற்றும் டென்ஷனினால் ஏற்படும் தலைவலிதான்.

மைக்ரேன் பாதிப்பு என்பது ஒற்றைத் தலைவலி ஆகும். இது புருவத்திற்கு மேல் வலி தெரியும். இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது வாந்தி உணர்வு, குமட்டல், கண்கள் மறைப்பது போன்ற உணர்வு, கண்களில் பூச்சி பறப்பது போன்ற உணர்வு இருக்கலாம். இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் வலிக்கும். அல்லது இரண்டு பக்கமும் வரலாம். அது மெதுவாக அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் தலையில் யாரோ இடிப்பது போன்ற தீவிரமான வலியாக மாறும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. சத்தத்தைக் கேட்க முடியாது. இதை போட்டோ போபியோ, போனா போபியா என்று சொல்வோம்.

இந்த மைக்ரேன் தலைவலியானது முதல் 2 மணி நேரம் வரை இருக்கும். அதைத்தொடர்ந்து 2 முதல் 3 நாள் வரை நீடிக்கலாம். இது பொதுவாக, தூக்கமின்மை, க்ளைமேட் சேஞ்ச், மன அழுத்தம், வேலை பளு, குளிர்ந்த பொருளை உண்ணுவது போன்ற நேரங்களில் ஏற்படுகிறது. அதைக் கண்டுபிடித்து சரி செய்தாலே ஓரளவு தீர்வு காணலாம். அதுபோன்று மூளையில் சுரக்கும் சில கெமிக்கல்கள் அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ ரத்தக்குழாய்கள் சுருங்குவதோ அல்லது விரிவடைந்தாலோ இப்படிப்பட்ட தலைவலி ஏற்படும். அதாவது, உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தாலும் இந்த மைக்ரேன் ஏற்படலாம்.

மைக்ரேன் வகைகள் மைக்ரேனில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, காமன் மைக்ரேன், கிளாசிக்கல் மைக்ரேன் என இரண்டு வகைகள் இருக்கின்றன.

சிகிச்சைகள் மைக்ரேனுக்கான சிகிச்சை என்றால் வரும் முன்காப்பது தான் நல்லது. மைக்ரேன் இருப்பது தெரிந்தால், மைக்ரேன் டைரி ஒன்று பராமரிக்கப்படும். அதில் முதலில் என்ன காரணத்தினால் வருகிறது என்பதை ஆராய்வார்கள். அதாவது தூக்கமின்மையால் வருகிறதா, உணவு ஒவ்வாமையால் வருகிறதா அல்லது வாசனை திரவியங்களால் வருகிறதா, முன்பு சொன்னது போன்று வேலைப் பளுவினாலா, மன அழுத்தமா என்று எப்போது தலைவலி வருகிறது என்று பார்ப்பார்கள். பின்னர், எந்த நேரத்தில் வருகிறது. எவ்வளவு நேரம் இருக்கிறது. வலி எப்படி உணர்கிறார்கள் என்பதை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.

மைக்ரேன் தலைவலிக்கான சிகிச்சைகள் இரண்டு வகையில் உள்ளது. `ப்ரிவென்ட்டிவ் மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ்’ `அபார்ட்டிவ் மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ்’ என்று இரண்டு வகைப்படும்.‘ப்ரிவென்ட்டிவ் மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ்’ என்பது அடிக்கடி தலைவலி வராமல் காக்கும் தடுப்புச் சிகிச்சை. அதற்கான மருந்துகளை 3 முதல் 6 மாதங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்வியல் மாற்றங்களும் அவசியம். தலைவலியைத் தூண்டும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

`அபார்ட்டிவ் மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ்’ என்பது ஒருமுறை தலைவலி வந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கான தீர்வளிக்கும். வலி வந்த 30 முதல் 45 நிமிடங்களுக்குள் பாராசிட்டமால் பீட்டா பிளாக்கர், எஸ்.எஸ்.ஆர்.ஐ., போன்ற மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலே பலன் தெரியும்.

மைக்ரேன் வராமல் தற்காத்துக் கொள்ளும் வழிகள் பிறப்பு மூலமாக ஒருவருக்கு மைக்ரேன் வருகிறது என்றால், அதை தடுக்க முடியாது. வருவதால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், வந்துவிட்டால், அதை அதிகமாகாமல் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். இதற்கு, டென்ஷன், கோபம், மன இறுக்கம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சூடான நீரை அருந்த வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும், தினமும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி, ரிலாக்ஸ்ஷேன் தெரபி, மைக்ரேன் டைரி மெயின்டன் செய்வது போன்றவற்றை செய்யவேண்டும்.

Advertisement