(ரெசிபி) முட்டையில்லா சாக்லேட் பனானா கேக்
நம்மில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒன்று தான் கேக். இதில் முட்டை கலக்கப்படுவதால் மிருதுவான தன்மை இருக்கும். குறிப்பாக சாக்லேட் கேக் என்றால் பலருக்கும் அலாதி பிரியம் தான். ஆனால், ஒரு சிலருக்கு முட்டை கலக்கப்பட்ட கேக் பிடிப்பதில்லை. இவர்களுக்காகவே இருக்கும் ஒன்று தான் முட்டையில்லா சாக்லேட் பனானா கேக். வாழைப்பழம், கோதுமை மாவு சேர்ப்பதால், குழந்தைகளுக்குப் பிடித்த சத்தான சிற்றுண்டியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
தேவையான பொருட்கள்:
முழு கோதுமை மாவு – ஒன்றேகால் கப்
புதிய/உலர்த்தப்பட்ட தேங்காய் – 2 ஸ்பூன்
சமையல் சோடா – 1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
உப்பு – ¼ ஸ்பூன்
பால் – ¾ கப்
காபி தூள் – 1 ஸ்பூன்
தூய கோகோ தூள் – ½ கப் (இனிப்பு சேர்க்காதது)
பழுப்பு சர்க்கரை – ½ கப்
எண்ணெய் – 1/4 கப்
வெண்ணிலா – 1 ஸ்பூன்
வாழைப்பழங்கள் – 2 (அரை முதல் முக்கால் கப் சதைப்பற்று)
சாக்லேட் சிப் அல்லது கோகோ நிப்ஸ் – 3 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மாவு, சமையல் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, துருவிய தேங்காய் ஆகிய உலர் பொருட்களைக் கலந்து தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை சூடாக்கி, அதில் கோகோ, காபி தூள் சேர்த்து கலக்கவும். வெண்ணிலா, சர்க்கரை மற்றும் எண்ணெயை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அடுத்து, வாழைப்பழத்தை கூழாக்கி, அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது, ஈரமான கலவை தயாராகிவிட்டது. உலர் பொருளை ஈரமான பொருளுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். அதிகமாகக் கலக்க வேண்டாம்.
காகிதம் விரிக்கப்பட்ட லோப் பேனில் இந்தக் கலவையை ஊற்றி, அதன் மேல் சாக்லேட் சிப்ஸ் அல்லது கோகோ நிப்ஸ்களைத் தூவி, 180°C-க்கு முன்சூடு செய்யப்பட்ட அடுப்பில் 40 நிமிடங்கள் அல்லது அது வெந்துவிடும் வரை சுடவும்.
கேக்கை வெளியே எடுத்து, ஆறவைத்து, துண்டுகளாக வெட்டிச் சுவைக்கவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் 3 முதல் 4 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். கேக்கை மைக்ரோவேவில் 30 விநாடிகள் சூடுபடுத்தி, ஒரு கோப்பை காபி அல்லது தேநீருடன் சுவைத்து மகிழுங்கள்.
மேலும்
-
குதிரை பேரத்திற்கு வழிவகுத்த கிரிஷ் ஷோடங்கரின் முந்திரிக்கொட்டை பேச்சு
-
காற்றுடன் மழை: மரங்கள் முறிந்தன
-
நத்தம் முத்தாலம்மன் கோயில் திருவிழா
-
தபால் ஓட்டுக்கள் எண்ணும் பெட்டி தயாரிப்பு தீவிரம்
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களை சங்கடங்களுக்கு ஆட்படுத்த கூடாது கலெக்டர் சரவணன் அறிவுரை
-
தேர்தல் வெற்றியை உறுதியாக நம்புவது ஏன்? நண்பர்களிடம் பகிர்ந்த பழனிசாமி