சொத்து குவிப்பு வழக்கு உள்ளது என்பதற்காக அமலாக்கத்துறை தலையிட வேண்டியதில்லை: ஐகோர்ட்

1

சென்னை: சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - எம்.பி.,யான, ஆர்.கிரிராஜன் தாக்கல் செய்த மனு: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வீரமணி, காமராஜ், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ., சத்யா ஆகியோர் மீது, சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இதன் காரணமாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.


இந்த மனுக்களை தள்ளுபடி செய்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கான ஆதாரங்கள் உள்ளன என, அமலாக்கத் துறை அதிகாரிகள் திருப்தி அடைய வேண்டும். மேலும், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து, ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement