(டிட் பிட்ஸ்) வெய்யிலில் நம்மை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை

கோடைகாலம் வந்து விட்டாலே வெயில் சுட்டெரிக்கும். கோடைகாலத்தில் சரியான உணவு முறையை கடைப்பிடிப்பது முக்கியம். அது தெரியாமல் நம் விருப்பத்திற்கு சாப்பிட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதாவது, பல வகைகளிலும் உடல் நலம் பாதிக்கும்.

அந்த வகையில் கடுமையான வெயில் நேரங்களில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்:

புளிப்பு காரம் அதிகம் சேர்க்கப்படும் புளிக்குழம்பு காரக்குழம்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. உடல் சூட்டையும் பித்தத்தையும் அதிகரிக்கும் என்பதால் வெயில் காலத்தில் இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

காரமான உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் சூட்டால் நீர் கடுப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

வெயிலில் எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். அதேபோல், வெயில் நேரத்தில் தேநீர் குடிப்பது பித்தத்தை அதிகப்படுத்தும். அதனால் முடிந்த அளவு வெயில் காலங்களில் இவற்றை தவிர்ப்பது நல்லது.

அதிக காரமான பச்சை மிளகாய், மிளகு மசாலா சேர்த்த உணவுகள் வயிற்றுப் போக்கை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் ஆசனவாயில் எரிச்சலையும் ஏற்படுத்தும். அதேபோல்,

கடைகளில் விற்கும் பரோட்டா போன்ற மைதா உணவுகள் மற்றும் பாஸ்ட்புட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

கோடை காலங்களில் உடலில் உஷ்ணம் சேர்ந்து விடும். அதனால் நீர்ச்சத்து குறைந்துவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பது, இளநீர் குடிப்பது மோர் சாப்பிடுவது, எலுமிச்சை சாறு, தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்கும்.

வெயில் காலத்தில் குழந்தைகளை அம்மை நோய் தாக்கும். எனவே நம் இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்

வெயில் காலத்தில் சிலருக்கு மஞ்சள் காமாலை நோய் வர வாய்ப்புண்டு. எனவே அதை தவிர்ப்பதற்காக காய்ச்சிய நீரை பருகலாம். அதேபோல் நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெயில் காலத்தில் பலருக்கும் சரும நோய்கள் வரும். எனவே அதை தவிர்ப்பதற்காக மெல்லிய பருத்தி ஆடைகளை அணியலாம்.. அதேபோல் தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

கோடை காலத்தில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால் சமைத்தவுடன் சாப்பிடுவது நல்லது. வெயில் காலங்களில் கண் தொடர்பான நோய்கள் நிறைய வரும். எனவே குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும். அதேபோல் வெயிலில் செல்ல நேரிடும் போது சன் கிளாஸ் அணியலாம்.

அதேபோல், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம்.

Advertisement