தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
தேனி, மே 3
தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரியில் ஹீட் ஸ்ட்ரோக் பாதித்தால் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இப் பாதிப்பை கண்டறிந்து பிரத்யேக இணைய முகவரியில் பதிவேற்றவ டாக்டர்கள், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகரித்தால் வெளியில் செல்லும் பொதுமக்கள் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்பு ஏற்படலாம் என அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லுாரியில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், 2அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஹீட் ஸ்ட்ரோக் பாதித்த நோயாளிகளுக்கு தேவையான முதலுதவி வழங்கி சிகிச்சை அளிக்க டாக்டர்கள், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஓ.ஆர்.எஸ்., கரைசல், மருந்துகள் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளன. ஹீட் ரோக் பாதித்து சிகிச்சைக்கு அனுமதித்திருந்தால், அவர்கள் பற்றிய தகவல்களை பிரத்யேக இணைய முகவரியில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,’ என்றனர்.
ஹீட் ஸ்ட்ரோக் தவிர்ப்பது எப்படி சிவக்குமரன், நிலைய அதிகாரி, அரசு மருத்துவக்கல்லுாரி, தேனி.‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்கல்லுாரியில் 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை. இதில் இருந்து தப்பிக்க முடிந்தளவு மதியம் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். நீர் சத்து குறைபாட்டை தவிர்க்க மோர், லெமன் ஜூன், நீராகாரம் எடுத்து கொள்ளலாம்.
கான்கிரீட் வீடுகளில் பகலில் உள்வாங்கும் வெப்பத்தை இரவில் வெளியிடுவதால் புழுக்கம் அதிகம் நிலவும். இதனை தவிர்க்க மேற்பரப்பில் ஓலைகள் அமைத்தல், தண்ணீர் தெளித்தல், இரவில் ஜன்னல்களை திறந்து வைத்தால் காற்றோட்டமாக இருக்க வாய்ப்புள்ளது. நீர் சத்து, நார்சத்து குறைபாட்டை தவிர்க்க வழக்கான உணவுகளை குறைத்து பழங்கள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். கோடை காலத்தில் இறைச்சிகள் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். மருத்துவக்கல்லுாரியில் புற நோயாளிகள் பிரிவில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் தயார் நிலையில் வைத்துள்ளோம். டாக்டர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. என்றார்