கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கேரள போலீஸ் கெடுபிடி; பக்தர்கள் அதிருப்தி

5


கூடலுார்: தமிழக - கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவில், இரு மாநில பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

தேனி மாவட்டம், கூடலுார் அருகே தமிழக - கேரள எல்லை, விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். இக்கோவிலுக்கு செல்ல கேரள வனப்பகுதி வழியாக, 14 கி.மீ., துாரத்தில் ஜீப் பாதையும், தமிழக வனப்பகுதியான பளியன்குடியில் இருந்து, 6.6 கி.மீ., தெள்ளுக்குடி வழியாக, 3.5 கி.மீ., துார நடைபாதையும் உள்ளது.
நேற்று, சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, கண்ணகி பச்சை நிற பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழக பூசாரி ராஜலிங்கம் பூஜை செய்தார்.வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமாக பக்தர்கள் வந்தனர். குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக கோவிலு க்கு செல்ல, ஜீப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இம்முறை குறைத்ததால் தரிசனம் முடித்து திரும்பி செல்ல முடியாமல் பக்தர்கள் சிரமப்பட்டனர்.

கோவில் வளாகத்தில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில், வருவாய் துறையினர் பொங்கல் வைக்க முயன்றபோது, அனுமதி இல்லை எனக்கூறி கேரள போலீசார் தடுத்தனர். இரு மாவட்ட கலெக்டர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படியே பொங்கல் வைப்பதாக, தமிழக வருவாய் துறையினர் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்த பின், அனுமதி அளித்தனர்.

இதற்கிடையே, தரிசனம் முடித்து கோவில் வளாகத்தில் இளைப்பாறிய பக்தர்களை மதியம், 12:00 மணிக்கே கோவிலை விட்டு வெளியேற கேரள போலீசார் கெடுபிடி காட்டியதால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

Advertisement