பாதியில் கைவிடப்பட்ட புதுநகர் சாலை பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: புதுநகரில் இரண்டு மாதங்களுக்கு முன் சாலையில் ஜல்லி கற்கள் கொட்டியதுடன் பாதியில் விடப்பட்ட சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

வாலாஜாபாத் ஒன்றியம், ஆண்டிசிறுவள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்டது புதுநகர் கிராமம். இக்கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் பிரதான சாலையை சென்றடையும் 2 கி.மீ., துாரம் கொண்ட சாலை உள்ளது.

புதுநகரைச் சேர்ந்த தொழிலாளர்கள், பள்ளி மாணவ - மாணவியர் இச்சாலையை பயன்படுத்தி இருசக்கர வாகனம் மூலம் காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, பரந்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், புதுநகர் சாலை மிகவும் பழுதடைந்து இரண்டு ஆண்டுகளாக குண்டும், குழியுமாக பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.

இச்சாலையை சீரமைக்க அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இச்சாலை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன் பணி தொடங்கப்பட்டது.

முதற்கட்ட பணியாக சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, இரண்டு மாதங்களாக அடுத்தக் கட்டப் பணி நடைபெறாமல் பாதியில் விடப்பட்டுள்ளது.

இதனால், இச்சாலையில் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.

எனவே, புதுநகரில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement