தயாரிப்பாளர் சங்கம் 'ஸ்டிரைக்'; படப்பிடிப்புகள் பாதிப்பு

12

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

நடிகர், நடிகையர், வருவாய் பகிர்வு அடிப்படையில், சம்பளத்தை பெற வேண்டும் என, கடந்த ஏப்.,26ம் தேதி நடந்த, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து, அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, நேற்று காலை தொடங்கிய வேலை நிறுத்தம், மாலை வரை நடந்தது.

இதனால் உள்ளூர், வெளியூரில் நடந்து வந்த 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி, விஷால், விஜய் ஆண்டனி, ரியோ உட்பட பலர் நடித்து வரும் படப்பிடிப்புகள் ரத்தாகின.
இதனால், பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:


தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளர்களின் லாப, நஷ்டங்களில் நடிகர்கள், இயக்குநர்கள் பங்கு கொள்கின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் அப்படி இல்லை. இருக்கும் ஒரு சில தயாரிப்பாளர்கள் கூட, இனி படங்கள் தயாரிப்பரா என தெரியவில்லை.

இது குறித்து, நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டு களாக பலமுறை தகவல் தெரிவித்துள்ளோம். எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. அதனால் தான் இந்த வேலை நிறுத்தம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, பெப்சி, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன. நடிகர் சங்கம், ஆரம்பம் முதலே எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.

Advertisement