கேளுங்கள்: 'கேஷ்லெஸ்' வசதி மறுக்கப்பட்டால் என்ன செய்வது?
உண்மையிலேயே மருத்துவ காப்பீடு திட்டம் மக்களுக்கு பயன் தருமா? அப்படி என்றால் எந்த மாதிரி திட்டம் பயனுள்ளதாக இருக்கும்?
- ராம்கோபால், சேலம்
இன்றைய சூழலில் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளை கருத்தில் கொண்டால், மருத்துவ காப்பீடு நிச்சயமாக மக்களுக்கு பயன் தருகிறது. எதிர்பாராத மருத்துவச் செலவுகள் குடும்பத்தின் நிதிநிலையை பாதிக்காமல் பாதுகாக்கும் ஒரு முக்கியமான நிதி கருவியாக இது செயல்படுகிறது.
பொதுவாக, மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சை செலவுகளை ஈடு செய்யும் இழப்பீடு வகை திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே பாலிசியில் 'கவர்' வழங்கும் திட்டங்களும் பலருக்கு ஏற்றதாக இருக்கும். அதேநேரம், முக்கியமான நோய்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் 'கிரிட்டிக்கல் இல்னெஸ்' போன்ற திட்டங்களையும் சேர்த்து கொள்ளலாம்.
ஒரு திட்டத்தை தேர்வு செய்யும்போது, உங்கள் வயது, குடும்பத்தின் மருத்துவ வரலாறு மற்றும் நிதிநிலை போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.
ஆண்டுக்கு 12 ரூபாய் கட்டும் பிரதமரின் விபத்து காப்பீடு எப்படி பெறுவது?
- எழிலன், துாத்துக்குடி
நீங்கள் குறிப்பிடும் திட்டம் 'பிரதமரின் பாதுகாப்பு பீமா யோஜனா!' இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய காப்பீட்டு கட்டணம் தற்போது 20 ரூபாய். இது, விபத்து காப்பீட்டு திட்டமாகும். விபத்தால் ஏற்படும் மரணம் மற்றும் உடல் ஊனமுற்ற நிலைக்கு காப்பீடு வழங்குகிறது.
இந்த திட்டத்தில் சேருவது மிகவும் எளிது. ஆதார் இணைக்கப்பட்ட சேமிப்பு வங்கி கணக்கு உள்ள உங்கள் வங்கி கிளையிலோ அல்லது தபால் நிலையத்திலோ ஒரு பக்க விண்ணப்பத்தை நிரப்பினால், அவர்கள் உங்களை இதில் பதிவு செய்து விடுவர்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் காப்பீட்டு கட்டணம் தானாகவே உங்கள் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். காப்பீடு பாதுகாப்பு ஜூன் 1 முதல் அடுத்த ஆண்டு மே 31 வரை அமலில் இருக்கும்.
இந்த திட்டத்தில் 18 முதல் 70 வயது வரை உள்ள கணக்குதாரர்கள் சேரலாம். காப்பீட்டு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்போது, உங்கள் கணக்கில் போதுமான இருப்பு இருக்க வேண்டும்; உங்கள் வங்கி கணக்கும் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
காப்பீடு செய்யப்பட்ட நபர் விபத்தில் இறந்தால், நியமிக்கப்பட்ட நபருக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இரு கண்களின் பார்வையை முழுமையாகவும் நிரந்தரமாகவும் இழந்தால் அல்லது இரு கைகளின் அல்லது கால்களின் பயன்பாட்டை இழந்தால் அல்லது ஒரு கண் பார்வையையும், ஒரு கை அல்லது காலின் பயன்பாட்டையும் இழந்தால் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
ஒரு கண் பார்வையை முழுமையாகவும் நிரந்தரமாகவும் இழந்தாலோ அல்லது ஒரு கை அல்லது காலின் பயன்பாட்டை இழந்தாலோ 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
நான் கடந்த 20 ஆண்டுகளாக 'நியூ இந்தியா அசூரன்ஸ்' கம்பெனியின் மருத்துவ காப்பீட்டை வைத்துள்ளேன். ஒரு முறை மட்டும் கேஷ்லெஸ் முறையில் இழப்பீடு பெற்றேன். அதன்பின், ஆறு முறை கிளெய்ம் செய்திருக்கிறேன். மருத்துவமனையில் கேஷ்லெஸ் வசதி இருப்பதாக விளம்பரம் செய்திருந்தாலும், உதவி செய்ய மறுக்கின்றனர். இப்போதும் கூட கிளெய்ம் செய்ய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன். சம்பந்தப்பட்ட டி.பி.ஏ.,வில் இருந்து ஆவணங்களை கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதற்கு தீர்வு என்ன?
- பாலகிருஷ்ணன், பெங்களூரு
உங்கள் சிரமங்களுக்கு வருந்துகிறேன். கேஷ்லெஸ் பட்டியலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அந்த வசதி கிடைக்கவில்லை என்பதே உங்கள் குறை.
இந்த கேஷ்லெஸ் வசதி ஏன் மறுக்கப்படுகிறது என்பதை, உங்களுக்கு பாலிசி வழங்கிய முகவர் அல்லது வங்கியிடம் கேட்டறியுங்கள். சமீபத்தில் அந்த மருத்துவமனை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது சில காரணங்களால் தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டிருக்கலாம். பொதுவாக இந்த வசதி தானாகவே கிடைக்க வேண்டியது தான். இருப்பினும் மறுப்பிற்கு காரணம் இருக்கலாம்.
உங்கள் பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள குறைதீர் அலுவலருக்கு அனைத்து விபரங்களுடனும் எழுதி தெரிவிக்கலாம். இந்த வசதி ஏன் மறுக்கப்பட்டது என்பதை விளக்கமாக கேளுங்கள். நிறுவனம் அல்லது டி.பி.ஏ., கேஷ்லெஸ் சிகிச்சையை மறுத்த ஆவணங்களையும் இணைக்கவும்.
பாலிசி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அவர்கள் எழுத்து வாயிலாக பதிலளிக்க வேண்டும். அது நடைபெறாவிட்டாலோ அல்லது அந்த பதில் திருப்திகரமாக இல்லையென்றாலோ, நிறுவனத்தின் மேல்நிலை அலுவலக குறைதீர் அதிகாரியிடம் (எடுத்துக்காட்டாக, கிளை அலுவலக பாலிசி என்றால் பிரிவு அலுவலகம்) முறையிடலாம்.
அதற்கு மேல், ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அமைப்பின் 'பீமா பரோசா' இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம். அங்கு பதிவு செய்யப்படும் புகார்கள், உங்கள் காப்பீட்டு நிறுவனத்துக்கும், ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,க்கும் ஒரே நேரத்தில் அனுப்பப்படும். கட்டுப்பாட்டு அமைப்பு கண்காணிப்பதால், நிறுவனங்கள் விரைவாக பதிலளிக்கின்றன. இந்த பிரச்னை விரைவில் தீரும் என நம்புகிறேன்.
மேலும்
-
மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியது பாஜ; கேரளாவில் காங்., கூட்டணிக்கு வெற்றிமுகம்
-
மண்ணை கவ்வினார் செல்வப் பெருந்தகை!
-
காங்., வாய்ப்பை காவு வாங்கினாரா சிதம்பரம்: ரவுத்திரம் ஆகிறார் ராகுல்!!
-
விசில் சத்தத்தில் செவிடு ஆனது திமுக!
-
தோல்வி முகத்தில் அமைச்சர்கள்; ஆட்சியை கைப்பற்றுகிறது விஜய் கட்சி
-
மரங்கள் இல்லாத பகுதியில் மரக்கன்று நடவு செய்தால் பயன்