மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியது; கேரளாவை வென்றது காங்கிரஸ் கூட்டணி

9

நமது நிருபர்




மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, பாஜ வெற்றி பெற்றுள்ளது. அசாமில் மீண்டும் பாஜ கூட்டணியே ஆட்சி அமைக்கிறது. கேரளாவில், கம்யூனிஸ்ட் கூட்டணியை காங்கிரஸ் கூட்டணி வீழ்த்தி பத்தாண்டுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றுகிறது.

மேற்கு வங்க தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் கடும் போட்டி நிலவியது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணமுதல் காங்கிரஸ், வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், அவர்களுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி ஓட்டு வங்கியாக மாற்றி வைத்திருப்பதாகவும் பாஜ குற்றம் சாட்டியது.

இதை மறுத்த முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு, தன் நிர்வாகத்தில் தலையிடுவதாக பதிலுக்கு குறை கூறினார். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட செயல்பாடுகளையும், மம்தா குற்றம் சாட்டி வந்தார்.
எனினும், அவரது ஆட்சியை காட்டாட்சி என்றும், மக்களுக்கும் , குறிப்பாக பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி என்றும் பாஜ விமர்சனம் செய்தது.

மம்தா ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர், மேற்கு வங்கத்தில் விரிவான பிரசாரம் மேற்கொண்டனர்.திரிணமுல் ஆட்சியில் பணி நியமனம், டெண்டர் முதல் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்களை பாஜ அம்பலப்படுத்தியது. மக்கள் மத்தியில் தொடர் பிரசாரமும் செய்தது. இதன் பயனாக, பாஜ, தனிப்பெரும்பான்மைக்கும் தேவையான இடங்களில் முன்னிலை பெற்று மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மாலை 6:30 மணி நிலவரப்படி பாஜ 204 தொகுதிகளையும், திரிணமுல் 83 தொகுதிகளையும் கைப்பற்றும் நிலையில் உள்ளன.
சட்டசபை தேர்தல் நடந்த அசாமில் பாஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மூன்றாம் முறையாக தொடர்ந்து பாஜ இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கிறது. மாலை 6:30 மணி நிலவரப்படி பாஜ கூட்டணி 102 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 21 இடங்களையும் கைப்பற்றும் நிலையில் உள்ளன.


கேரளாவில், பத்தாண்டு இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாலை 6:30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களை வென்றுள்ளது. இடது முன்னணி 35 இடங்களையும், பாஜ கூட்டணி 3 இடங்களையும் வென்றுள்ளன.

கேரளாவில் சாத்தன்னுார், கழக்கூட்டம், நேமம் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. நேமம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் வெற்றி பெற்றார். புதுச்சேரி தொகுதியில் ரங்கசாமி கட்சி மற்றும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 16 தொகுதிகளுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

Advertisement