திருக்கோவிலுாரில் கடைசி சுற்று வரை அ.தி.மு.க., - த.வெ.க., மாறிமாறி முன்னிலை 285 ஓட்டில் பழனிசாமி வெற்றி

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க., த.வெ.க., இடையே ஒரு சில ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அடுத்தடுத்த சுற்றுகள் நகர்ந்ததால் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

திருக்கோவிலுார் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை விழுப்புரம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. தி.மு.க., அ.தி.மு.க., இடையே போட்டி என எண்ணி இருந்த நிலையில், ஓட்டுப்பதிவு எண்ணிக்கை துவங்கிய முதல் சுற்றிலேயே தி.மு.க., வை பின்னுக்கு தள்ளி அ.தி.மு.க., த.வெ.க., இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

துவக்கத்தில் இருந்தே அ.தி.மு.க., த.வெ.க., இடையே போட்டி நிலவிய நிலையில், ஒன்பது சுற்றுக்கள் வரை அ.தி.மு.க., முன்னிலை வகித்தது. 10வது சுற்றில் த.வெ.க., அ.தி.மு.க., வை பின்னுக்கு தள்ளி 54 ஓட்டுக்கள் முன்னிலை பெற்றது. இது 11 வது சுற்றில் 335 ஓட்டாக அதிகரித்தது. 12 வது சுற்றில் 279 ஓட்டுக்கள் குறைந்தாலும், 13வது சுற்றில் 385 ஓட்டுக்களாகவும், 15வது சுற்றில் 1703 ஓட்டாகவும், 17 வது சுற்றில் 2,405 ஓட்டுக்களும், 18வது சுற்றில் 3,418 ஓட்டுக்களும் என படிப்படியாக உயர்ந்து வந்தது.

19வது சுற்றில் இது 2836 ஓட்டுக்களாக குறைய துவங்கியது. 20 வது சுற்றில் 2020 ஓட்டாக இருந்தது. திடீரென 21வது சுற்றில் வாக்கு வித்தியாசம் வெறும் 497 ஆக குறைந்தது. 23வது சுற்றில் வெறும் 24 ஓட்டுக்கள் மட்டுமே த.வெ.க., அதிகம் பெற்றது. இது 24 வது இறுதிச்சுற்றில் அ.தி.மு.க., 100 ஓட்டுக்கள் அதிகம் பெற்றது.

இந்நிகழ்வுகள் ஐ.பி.எல்., டி20 கிரிக்கெட் போட்டியை மிஞ்சும் அளவிற்கு சென்றதால், அ.தி.மு.க., த.வெ.க., வினர் இடையே படபடப்பு கூடியது. இறுதிச்சுற்றுக்கு முன்பாக அறிவித்த தபால் ஓட்டுக்களில் அ.தி.மு.க., 686, த.வெ.க., 501 ஓட்டுக்கள் பெற்றது.

இதன் மூலம் அ.தி.மு.க., வேட்பாளர் பழனிச்சாமி 285 ஓட்டுக்கள் அதிகம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. என்றாலும் இதனை ஒப்புக் கொள்ளாத த.வெ.க., வினர் செல்லாத ஓட்டுக்கள் என அறிவிக்கப்பட்ட தபால் ஓட்டுக்களை மீண்டும் என்ன வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்ற ஓட்டு என்னும் மையத்தில் இருந்து அதிகாரிகள் மீண்டும் தபால் ஓட்டுக்களை என்ன ஒப்புக் கொண்டு மாலை 6:20 மணிக்கு தபால் ஓட்டு எண்ணிக்கை துவங்கப்பட்டது. இதனால் வெற்றி பெற்றவர்கள் யார் என்று அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

செல்லாத ஓட்டுக்கள் என அறிவிக்கப்பட்ட 444 ஓட்டுகள் எண்ணப்பட்டு, அவை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., வேட்பாளர் பழனிச்சாமி 285 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படது. திருக்கோவிலுார் தொகுதி ஓட்டு எண்ணிக்கை கடைசிவரை பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் தொகுதி மக்களுக்கு உருவாக்கியது என்றால் மிக ஆகாது.

Advertisement