ஆண்டிபட்டியில் தம்பியை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற அண்ணன்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் மகாராஜன், 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தம்பியை தோற்கடித்தார்.

கடந்த, 2019 லோக்சபா தேர்தலுடன், ஆண்டிபட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க.,வில் மகாராஜன், அ.தி.மு.க.,வில் அவரது தம்பி லோகிராஜன் போட்டியிட்டனர்.

தொகுதிக்கு பரிச்சயம்




இதில், மகாராஜன் வெற்றி பெற்றார். 2021ல் சட்டசபை தேர்தலில், மீண்டும் அண்ணன், தம்பிகளே தி.மு.க., -- அ.தி.மு.க., வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இத்தேர்தலிலும், தி.மு.க., வேட்பாளர் மகாராஜன் வெற்றி பெற்றார். இருமுறை பெற்ற வெற்றியால், தொகுதிக்கு பரிச்சயமானவராக இருந்தார்.

இந்த தேர்தலிலும், தி.மு.க.,வில் மகாராஜன், அ.தி.மு.க.,வில் லோகிராஜன் 3வது முறையாக போட்டியிட்டனர். இத்தேர்தலில், அண்ணனை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில், தம்பி தன் முழு பலத்தையும் காட்டி தேர்தலை எதிர்கொண்டார்.

அண்ணன் - தம்பி இருவரும் பிரசாரத்தில் சொந்த, பந்தங்கள், உறவினர்களை முன்னிலைப்படுத்தி ஓட்டு சேகரித்தனர். ஆனால், 3வது முறையாகவும் தி.மு.க., வேட்பாளர் மகாராஜனே வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம், ஆண்டி பட்டி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை தன் தம்பியுடன் போட்டியிட்டு, 'ஹாட்ரிக்' வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார்.

ஓட்டு எண்ணிக்கையில், 14வது சுற்று வரை அ.தி.மு.க.,வே முன்னிலையில் இருந்ததால், இம்முறை எப்படியும் வெற்றி வசமாகும் என்ற லோகிராஜனின் மகிழ்ச்சி, நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

ஆண்டிபட்டி பேரூராட்சி, ஆண்டிபட்டி ஒன்றிய பகுதி அ.தி.மு.க.,விற்கு சாதகமாக இருந்தது. 15வது சுற்றில் கடமலைக்குண்டு,- மயிலாடும்பாறை மலைப்பகுதி கிராமத்தினர் ஓட்டுகள் தி.மு.க.,விற்கு சாதகமாக விழுந்தது.

கவனம் செலுத்தவில்லை




கூடலுார் நகராட்சி, கம்பம் ஒன்றிய கிராமங்கள், தி.மு.க., வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்த்தது. இறுதியில், தி.மு.க., வேட்பாளர் மகாராஜன், 74,324 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

த.வெ.க., வேட்பாளர் பாண்டி பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தவில்லை என்றாலும், 64,770 ஓட்டு கள் பெற்று 2ம் இடம் பெற்றுள்ளார். அ.தி.மு.க., லோகிராஜன், 63,343 ஓட்டுகள் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளார்.

தொடர்ந்து மூன்றாம் முறை வெற்றி பெற்றாலும், தி.மு.க., ஆட்சி வாய்ப்பை இழந்துள்ளதால், வெற்றியை கொண்டாட முடியாமல் தி.மு.க.,வினர் வருத்தத்தில் உள்ளனர்.

Advertisement