திமுகவில் ஓரம் கட்டப்பட்ட வி.எஸ்.பாபு முதல்வரை எதிர்த்து வெற்றி
சென்னை: தி.மு.க.,வில் ஓரம் கட்டப்பட்டதால், கட்சியிலிருந்து வெளியேறிய வி.எஸ்.பாபு, தன் முன்னாள் தலைவரான, முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்றது, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு, புரசைவாக்கம் தொகுதியில், தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர் வி.எஸ்.பாபு. கடந்த 2011ல் புரசைவாக்கம் தொகுதி பிரிக்கப்பட்டு, கொளத்துார் தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது, நடந்த தேர்தலில், ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஸ்டாலினுக்காக, தேர்தல் பணிகளை முன்னின்று செய்தவர் வி.எஸ்.பாபு. அதன்பின், அ.தி.மு.க.,வில் இருந்து சேகர்பாபு வந்த பின், வி.எஸ்.பாபு முக்கியத்துவம் குறைந்தது.
ஒரு கட்டத்தில் கட்சியில் இருந்து, வி.எஸ்.பாபு ஓரம் கட்டப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.,வில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். அங்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை.
எனவே, கடந்த ஆண்டு அ.தி.மு.க.,வில் சேர்ந்தார்.
அக்கட்சியில் மாவட்டச் செயலரானார். திடீரென கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் த.வெ.க.,வில் இணைந்தார். தேர்தலில், கொளத்துார் தொகுதியில் போட்டியிட்டு, முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தி, வெற்றி வாகை சூடியுள்ளார்.