கோவையில் இரு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது காங்கிரஸ்

கோவை: கோவையில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட காங்., வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளில், கவுண்டம்பாளையம், சிங்காநல்லுார் தொகுதிகள், தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூர்ய பிரகாஷ், சிங்காநல்லுார் தொகுதிக்கு ஸ்ரீநிதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அப்போது, கட்சிக்காக உழைத்தவர்களை ஒதுக்கிவிட்டு, புதிதாக இணைந்தவர்களுக்கு, 'சீட்' வழங்குவதா என, கட்சியினரிடம் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, கட்சிக்குள் எந்த பூசலும் இல்லை என, இரு வேட்பாளர்களும் மறுப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து, இரு தொகுதிகளிலும் தி.மு.க., - காங்., முக்கிய நிர்வாகிகள் பிரசாரம் செய்தனர். நேற்று வெளியான முடிவுகளில், த.வெ.க., வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்தனர்.

வேட்பாளர் ஸ்ரீநிதி, 27 சுற்றுகளின் நிறைவில், 65,024 ஓட்டுகள், வேட்பாளர் சூர்ய பிரகாஷ், 28 சுற்றுகளின் நிறைவில், 89,683 ஓட்டுகள் பெற்று, தோல்வியை சந்தித்தனர்.

Advertisement