விஜய் ஆட்சி அமைக்க காங்., ஆதரவா? கிரீஷ் ஷோடங்கர் ஆலோசனை

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து, தேர்தலில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர்கள் ஐந்து பேருடன், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க., கூட்டணியில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ஐந்து பேருடன், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கிரீஷ் ஷோடங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், குளச்சல் தாரகை கத்பட், விளவங்கோடு பிரவீன்குமார், கிள்ளியூர் ராஜேஷ்குமார், மேலுார் விஸ்வநாதன், மயிலாடுதுறை ஜமால் முகமது யூனஸ் ஆகிய ஐவரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், த.வெ.க., ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்தும், அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டம், தமிழக காங்., அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென நேற்று நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றப்பட்டது.

எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கும் என, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. வட சென்னை மாவட்ட காங்கிரசார சிலர், நேற்று சத்தியமூர்த்தி பவன் வந்து, 'இனியாவது நல்ல முடிவு எடுங்கள்' என கோஷம் எழுப்பினர். அதனால் கூச்சல், குழப்பம், வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, நட்சத்திர ஓட்டலுக்கு கூட்டம் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக காங்., சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரீப் வெளியிட்ட அறிக்கையில், 'மாநில தலைவருக்கு நெருக்கமானவர்கள் என்ற போர்வையில், இரு ஆண்டுகளுக்கு முன் கட்சியில் சேர்ந்து, அட்டூழியம் செய்பவர்கள் ஓடி விடுங்கள். தமிழக காங்.,கை மீட்க, உண்மையான காங்கிரசார் தயாராகி விட்டனர்' என கூறியுள்ளார்.

@block_B@ 'மேலிடம் முடிவு செய்யும்'

அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி, சென்னையில் நேற்று அளித்த பேட்டி; தமிழக சட்டசபை தேர்தலில் நடந்திருப்பது, இளைஞர்கள் புரட்சி. தேர்தலுக்கு முன்பே, த.வெ.க.,வோடு காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் என, பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினோம்.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காக, அந்த முயற்சியில் ஈடுபட்டோம். தற்போது, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள த.வெ.க., அமைக்கும் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து, காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும். விஜய் பக்கம் மக்கள் ஆதரவாக இருந்துள்ளனர். தமிழக காங்கிரசில் மாற்றம் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.block_B

Advertisement