திடீர் மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க  எதிர்பார்ப்பு: கள ஆய்வு செய்து பிரத்யேக செயலியில் பதிவேற்றம்

மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் கனமழையால் பலன்தரும் நிலையில் உள்ள பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

குறிப்பாக போடி, கம்பம், ஆண்டிபட்டி தாலுகாக்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, திராட்சை பயிர்கள் சேதமடைந்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் திடீர் மழை பெய்ததால் பயிர்கள் வீணாகியது.

மாவட்ட அளவில் மொத்தம் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, கரும்பு, திராட்சை பயிர்கள் சேதமாகியது.சூறாவளி காற்றால் பெரியகுளம் பகுதியில் மா பிஞ்சுகள் உதிர்ந்து மகசூல் பாதித்தது.

விவசாயிகள் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பலன்பெறும் நிலையில் மகசூல் சேதமடைந்ததால் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

வேளாண், தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் சேதமடைந்த பயிர்கள் குறித்து பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறோம். ஆய்வு முடிந்தவுடன் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப் படும்.

கணக்கெடுப்பில் பாதித்த விளை நிலங்களுக்கு சென்று அங்கிருந்து இதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்றனர்.

அரசின் விதிப்படி மழை,இயற்கை சீற்றத்தால் பயிர்கள் 33 சதவீதத்திற்கும் மேல் சேதமடைந்திருந்தால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கப்படும். இதனை பெறுவதற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அதிகாரிகள்,வி.ஏ.ஓ.,க்களை நேரில் சந்தித்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின், வருவாய், வேளாண்துறை அதிகாரிகள் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று சேதத்தை கணக்கெடுப்பார்கள். அதன் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். விவசாயிகள் “உழவன்” செயலி மூலமாகவும் தங்களின் பயிர் சேத விவரங்களை பதிவு செய்யலாம்.

Advertisement