அம்மா, மகன், மருமகனுக்கு வெற்றி; தோல்வி அடைந்த சகோதரிகள்

3

சென்னை: சட்டசபை தேர்தலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் போட்டியிட்டனர். கொளத்துார் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில், அவரது மகனும், துணை முதல்வருமான உதயநிதி, சேப்பாக்கம் தொகுதியில் வென்று உள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியிலும்; அவரது மகன் செந்தில்குமார், திண்டுக்கல் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் டெய்சியின் கணவர் ஆதவ் அர்ஜுனா, த.வெ.க., சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியிலும்; லால்குடி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்; புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ஜோஸ் சார்லஸ் ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் எழில் கரோலின், வி.சி.க., சார்பில் அரக்கோணத்திலும்; மற்றொரு மகள் எழில் கேத்தரின், த.வெ.க., சார்பில் மதுராந்தகம் தொகுதியிலும் போட்டியிட்டனர்; இருவருமே தோல்வி அடைந்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில், தி.மு.க., சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ., மகாராஜனும், அ.தி.மு.க., சார்பில் அவரது தம்பி லோகிராஜனும் போட்டியிட்டனர். இதில், மகாராஜன் வெற்றி பெற்றார்.

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, விருத்தாசலம் தொகுதியில் வென்ற நிலையில், அவரது மகன் விஜய பிரபாகரன், விருதுநகர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

Advertisement