திருப்புவனத்தில் கூடுதல் சோலார் மின் விளக்கு: பொதுமக்கள் கோரிக்கை

திருப்புவனம்:திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கூடுதலாக சோலார் உயர் மின் கோபுர விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரை நகருக்கு அருகாமையில் திருப்புவனம் அமைந்திருப்பதால் பலரும் இங்கு குடியேறி வருகின்றனர். திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கல்வி, மருத்துவம், வியாபாரம், கூலி வேலைகளுக்காக தினசரி மதுரை சென்று வருகின்றனர். திருப்புவனம் நகருக்கு 24 மணி நேரமும் பஸ் வசதி இருப்பதால் பலரும் தங்கள் வேலையை முடித்துவிட்டு இரவில் திருப்புவனம் வருகின்றனர்.

திருப்புவனத்தில் இரவு நேரத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் நகரே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திருப்புவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோலார் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. தெருக்களில் இரண்டு விளக்குகள் கொண்ட சோலார் விளக்குகளும், தேசிய நெடுஞ்சாலை ஒட்டி ஐந்து விளக்குகள் கொண்ட உயர் மின் கோபுரம் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மார்க்கெட் வீதி திரும்பும் இடத்தில் சோலார் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது .

இதனை ஒட்டி சாலையின் இரு புறமும் 200 மீட்டர் தூரத்திற்கு எந்த இடத்திலும் சோலார் மின்விளக்குகள் இல்லை .இரவு 10:00 மணிக்கு மேல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விடுவதால் தேசிய நெடுஞ்சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது . ரோட்டின் இரு புறமும் இரவு நேரங்களில் ஏராளமான கோயில் மாடுகள் படுத்து கிடக்கின்றன. மாடுகள் கிடப்பது தெரியாமல் பலரும் அவற்றின் மீது தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இன்று வரை சோலார் உயர் மின் கோபுரம் விளக்குகள் அமைக்கப்படவே இல்லை .மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் கூடுதலாக சோலார் உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement