காப்பகத்தில் இருந்து தப்பிய புலியை தேடும் பணி தீவிரம்: 20 நாட்களாக போராடும் வனத்துறையினர்

3

கூடலுார்: பெரியாறு புலிகள் காப்பகத்தில் இருந்து தப்பிய புலியை பிடிக்க கேரள வனத்துறையினர் கூண்டு வைத்தனர். 20 நாட்களுக்கு மேல் ஆகியும் சிக்காததால் அதனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


கேரள மாநிலம் மூணாறு மறையூர் பகுதிகளில் கால்நடைகளை கொன்று குவித்த ஆண் புலியை கூண்டு வைத்து பிடித்து கடந்த மார்ச்சில் பெரியாறு புலிகள் காப்பகத்தில் விட்டனர். அதற்கு முன் புலியின் கழுத்தில் 'ரேடியோ காலர்' பொருத்தி வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் காப்பகத்தை விட்டு புலி தப்பியது. 'ரேடியோ காலர்' சிக்னலும் கிடைக்கவில்லை. இதனால் வனத்துறையினர் தனிப்படை அமைத்து புலியை தேடினர்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்பு குழுவின் அவசர ஆலோசனைக் கூட்ட முடிவின் படி தப்பிய புலியை கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு முறை கூண்டில் சிக்கிய புலி மீண்டும் கூண்டில் சிக்குமா என்ற சந்தேகமும் இருந்தது.
இந்நிலையில் ஏப்.,28ல் இடுக்கி மாவட்டம் தங்கமலை மூலக்கயம் அருகே தேயிலை தோட்ட பகுதியில் இருந்து ரேடியோ காலர் சிக்னல் கிடைந்தது. அங்கு உதவி கள இயக்குனர் லட்சுமி தலைமையில் வனத்துறையினர் முகாமிட்டனர்.

மூன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் கூண்டு வைத்தனர். 100 மீட்டர் சுற்றளவில் ஆயுதம் ஏந்திய வனக் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் 20 நாட்களுக்கு மேலாகியும் புலி கூண்டில் சிக்கவில்லை. ரேடியோ காலர் சிக்னலும் கிடைக்காததால் புலியை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றதா அல்லது வனப்பகுதிக்குள் சென்று விட்டதா என வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிர படுத்தியுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் இரவில் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

Advertisement