வழிமாறி ஊட்டி நகரில் உலா வரும் குட்டி யானை அசம்பாவிதம் நடப்பதற்குள் காப்பாற்றுவது அவசியம்

ஊட்டி: ‘ஊட்டி நகரில் உலா வரும் குட்டி யானையை காப்பாற்ற உடனடி நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டியில் கோடை சீசன் நிலவி வரும் நிலையில், தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு ஒரு குட்டியானை வழிமாறி வந்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. தொட்டபெட்டா சிகரம் மூடப்பட்டு, காட்டு யானை வேறு பகுதிக்கு சென்ற பின்னர் திறக்கப்பட்டது.

இதன் பின்னர் ஊட்டியை ஒட்டி உள்ள ‘பன்சிட்டி’ அருகில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்தது. இதனால், யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை திடீரென இந்த காட்டு யானை ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள எட்டின்ஸ் சாலையில் வலம் வந்தது.

அங்குள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று அங்கிருந்து, சாலையில் நடந்து சென்றது. அங்கிருந்த காய்கறி தோட்டங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. நேற்று ரோஜா பூங்கா, எல்க்ஹில் முருகன் கோவில் அருகே முகாமிட்டு உள்ளது. அங்கு வந்த வனத்துறையினர் ட்ரோன் வாயிலாக கண்காணித்து வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்கள் கூறுகையில்,‘குட்டியானை வழிமாறி ஊட்டி நகரப்பகுதியில் திக்கு தெரியாமல் அலைமோதுகிறது. மக்களுக்கும், யானைக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதனை பிடித்து உடனடியாக முதுமலைக்கு கொண்டு செல்ல வேண்டும்,’ என்றனர்.

Advertisement