சமாதானப்படுத்தியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம்! மேட்டுப்பாளையத்தில் தி.மு.க.பாடம்

கோவை: மேட்டுப்பாளையம் தொகுதியில், சுயேட்சையாக களமிறங்கிய போட்டி வேட்பாளர் டி.ஆர்.எஸ். 26,756 ஓட்டுகள் பெற்றதால், தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. 

மேட்டுப்பாளையம் தொகுதி அ.தி.மு.க. வசம் இருந்தது; செல்வராஜ் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இம்முறை முன்னாள் எம்.எல்.ஏ., ஓ.கே.சின்னராஜ் போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் டி.ஆர்.எஸ்., என்றழைக்கப்படும் சண்முக சுந்தரம் வாய்ப்பு கேட்டார்.

இவர் 2021ல் போட்டியிட்ட போது, 1,02,775 ஓட்டுகள் பெற்றார். 2,456 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார். இம்முறை எப்படியும் ஜெயித்து விடலாம் என நினைத்தார். அவருக்கு பதிலாக, தி.மு.க. சார்பில் கவிதா நிறுத்தப்பட்டார். 

அதிருப்தி அடைந்த டி.ஆர்.எஸ். சுயேட்சையாக களமிறங்கினார். அவரை கட்சி நிர்வாகிகள் சமாதானம் செய்து, வேட்பு மனுவை வாபஸ் பெற வைக்கவில்லை.

மாறாக, கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், அவர் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார். குறைந்தபட்சம் 15 ஆயிரம் ஓட்டுகள் பெறுவதற்கு வாய்ப்புள்ளது; அதனால், தி.மு.க. வெற்றி பாதிக்கப்படலாம் என கருதப்பட்டது.

தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் போட்டி நிலவியது. ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் தி.மு.க. முன்னிலை வகித்தது. சில சுற்றுகள் கடந்ததும் த.வெ.க. முன்னேறியது. கடைசி சுற்றின் இறுதியில், த.வெ.க. வேட்பாளர் சுனில் ஆனந்த், 75,413 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார்.

தி.மு.க. வேட்பாளர் கவிதா, 67,813 ஓட்டுகளுடன் இரண்டாமிடம் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சின்னராஜ், 61,550 ஓட்டுகளுடன் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார். 7,768 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது.

சுயேச்சையாக போட்டியிட்ட டி.ஆர்.எஸ். 26,756 ஓட்டுகள் பெற்று, 4ம் இடம் பெற்றார். இவர் பெற்ற ஓட்டுகளை சேர்த்தால், மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கலாம்.

அவரை சமாதானம் செய்யாமல், சுயே., வேட்பாளர் தானே என அலட்சியமாக விட்டதால், இப்போது ஒரு தொகுதியை இழந்திருக்கிறோம் என கூறி, அக்கட்சியினர் இப்போது வருத்தப்படுகின்றனர்.  

Advertisement