கற்சாலையான ஆவின் சாலை
காரைக்குடி:காரைக்குடி ஆவின் நிறுவனம் செல்லும் சாலையானது முற்றிலும் சேதமடைந்து கற்சாலையாகவும் மின்விளக்கு இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளதால் பால் ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி கழனிவாசலில் 1983 ம் ஆண்டு ஆவின் நிறுவனம் தொடங்கப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கி 332 சங்கங்களிடமிருந்து 12 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 65 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனத்திற்கு பால் கொண்டு வரும் வாகனங்கள், மற்றும் உற்பத்தி செய்யப்பட்டு வெளியே செல்லும் வாகனங்கள் என தினமும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்கின்றனர். ஆனால் ஆவின் நிறுவனத்திற்கு வந்து செல்லும் சாலை போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதால் முற்றிலும் சேதமடைந்து கற்சாலையாக காட்சியளிக்கிறது. தவிர தெரு விளக்கு இல்லாததால் வேலைக்கு வந்து செல்பவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். முறையாக சாலையை பராமரிப்பதோடு போதிய மின் விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.