சுருளியாறு நீர் மின் நிலையத்தில் உற்பத்தியை அதிகரியுங்கள் :மின்வாரிய பரிந்துரை செயல்படுத்த கோரிக்கை

கம்பம்:சுருளியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க மின்வாரிய அதிகாரிகள் செய்த பரிந்துரையை அமல்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இந்த பரிந்துரையை புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நிறைவேற்றி மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மனித வாழ்வில் மின்சாரம் அத்தியாவசியமாக மாறி உள்ளது. அதன் பயன்படும் தினமும் அதிகரித்து வருகிறது. காற்று, நிலக்கரி, அணு, நீர் ஆகியவற்றை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. காரணம் பிற முறைகளை ஒப்பிடுகையில் நீரை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய செலவு குறைவாகும். தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப், சுருளியாறு என இரு நீர் மின் நிலையங்கள் உள்ளன. இவைகளை தவிர்த்து முல்லைப் பெரியாற்றில் பல இடங்களில் 'மைக்ரோ' மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி நடக்கிறது.


லோயர் கேம்ப் மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் உற்பத்தி நடைபெறுகிறது. ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் 42 மெகாவாட் என திறன் அதிகரிக்கப்பட்டு, தற்போது 168 மெகாவாட் என உற்பத்தி உயர்த்தப்பட்டுள்ளது.

சுருளியாறு மின் நிலையம் 1978 ல் துவங்கப்பட்டது முதல் தற்போது வரை 35 மெகாவாட் உற்பத்தி மட்டும் நடக்கிறது. இது தமிழகத்தில் கோடை காலத்திலும் மின் உற்பத்தி செய்யும் ஒரே நிலையமாகும். தமிழகத்தில் புலிகள் காப்பகத்திற்குள் அமைத்துள்ள ஒரே மின் நிலையமாகும். மேகமலையில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு நீர்த்தேக்கங்களில் சேகரமாகும் தண்ணீரை இரவங்கலாறு அணையில் தேக்கி, அங்கிருந்து குழாய் மூலம் கொண்டு வந்து வண்ணாத்தி பாறை வனப்பகுதியில் உள்ள மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நீர் மின் உற்பத்திக்கு தண்ணீர் கொண்டு வரும் உயரம் முக்கிய காரணியாகும். லோயர்கேம்ப்பில் 35 மெகாவாட் உற்பத்திற்கு 400 கன அடி தண்ணீர் தேவைப்படும். ஆனால் சுருளியாறு நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்தி செய்ய 141 கன அடி போதுமானது. காரணம் சுருளியாறு மின் நிலையத்திற்கு 971 மீ., உயரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறனை 42 மெகா வாட்டாக உயர்த்த மின்வாரியத்தினர் பல ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு பரிந்துரைத்தனர். அந்த பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. சுருளியாறு நீர் மின் நிலைய திறன் அதிகரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதனால் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு கிடப்பில் உள்ள இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement