பயணியர் கூடம் இல்லாத பஸ் நிறுத்தம்
திருப்புத்துார்:திருப்புத்துார் நான்கு ரோடு சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற் கூடம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்புத்துார் நகரில் முக்கியமான போக்குவரத்து நிறுத்தங்களில் பயணியர் நிழற் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நான்கு ரோடு சந்திப்பில் இதுவரை பயணியர் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. காரைக்குடி, புதுக்கோட்டை, கண்டரமாணிக்கம்,மதுரை ரோடு சந்திக்கும் இந்த இடத்தில் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் பஸ்சில் ஏற ரோட்டோரத்தில் காத்திருக்கின்றனர்.
அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன. பல ஆண்டுகளாக பஸ் நிறுத்தம் செயல்பட்டாலும் இதுவரை பயணியர் காத்திருக்க போதிய நிழற்கூரை வசதி அமைக்கப்படவில்லை. சுவாமி திருவீதி உலா, தேரோடும் வீதி, குறுகலான ரோடு என்று அப்பகுதியில் பயணியர் கூடம் அமைப்பது தாமதமாகிறது. இதனால் அப்பகுதியில் ஆய்வு செய்து பொருத்தமான இடத்தில் நிழற்கூரை அமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.