அமைச்சர் பதவிக்கு ரூ. 100 கோடி பேரம்: நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் பதவிக்கு ரூ. 100 கோடி வரை பேரம் நடப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர், கூறியதாவது:

நாடு முழுதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதி நீட் தேர்வு, வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மும்மொழி கொள்கையால், பிரெஞ்சு பாடத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய - பிரெஞ்சு உறவில் பிரெஞ்சு பாடத்தை மாணவர்கள் விரும்பி படித்து வருகின்றனர். ஆகையால், உடனடியாக பிரதமர் மோடிக்கு பிரெஞ்சு மொழி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுத வேண்டும்.

புதுச்சேரியில் முதல்வர், இரண்டு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இன்னும் மூன்று அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியேற்க வேண்டும். இதில் இழுபறி நீடித்து வருகிறது. பொது வெளியில் அமைச்சர் பதவிக்கு பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, ஒரு அமைச்சர் பதவிக்கு ரூ. 100 கோடி வரை பேரம் பேசப்படுகிறது. இதனால் தான் அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிபோகிறது. அமைச்சர் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் என்ன என்று முதல்வர் ரங்கசாமி அறிக்கை வெளியிடவேண்டும்.

தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பில் ஊழல் செய்யமாட்டேன் என தெரிவித்தார். அதேபோல் விஜய்க்கு நெருக்கமான ரங்கசாமியும் விஜய் பாணியில் செயல்படுவாரா. ஆரம்பமே கோணலாக அமைச்சர் பதவிக்கு ஏலம் போகிறது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை.

புதுச்சேரிக்கு சம்பந்தம் இல்லாதவர் அமைச்சராக கனவு கண்டு, டில்லிக்கும், புதுச்சேரிக்கும் காவடி துாக்குகிறார். தற்போது போதை மாநிலமாக இருக்கும் புதுச்சேரி சூதாட்ட மாநிலமாக மாறிவிடும் சூழல் உள்ளது' என்றார்.

Advertisement