நெல் கொள்முதல் நிலையத்தில் ராகேஷ் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு
சங்கராபுரம்: தேவபாண்டலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ராகேஷ் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சங்கராபுரம் அடுத்துள்ள தேவபாண்டலம் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு சங்கராபுரம் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நெல் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மேற்கூரை இன்றி திறந்தவெளியில் செயல்பட்டு வரும் இந்த கொள்முதல் நிலையத்தில், மழைக்காலங்களில் நெல் பாதுகாப்பின்றி வீணாகி வருகிறது.
நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இது குறித்து தகவலறிந்த சங்கராபுரம் எம்.எல்.ஏ., ராகேஷ் நேற்று தேவபாண்டலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மழையில் சேதமடைந்த நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். ஆய்வின்போது அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜாராம், நகர செயலாளர் நாராயணன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.
அதனை தொடர்ந்து, சங்கராபுரம் டி.என்.சி.எஸ்.சி., நுகர்பொருள் வாணிப குடோனில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.