திருமால்பூர் ரயில்வே நடை மேம்பாலயோரம் பள்ளத்தில் தடுப்பு அமைக்க பயணியர் கோரிக்கை

காஞ்சிபுரம்:திருமால்பூர் ரயில்வே நடை மேம்பாலயோரம், ஆபத்தான பள்ளத்தில் தடுப்பு அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் வரையில், மின்சார ரயில் பாதை உள்ளது. இதில், வாலாஜாபாத், திருமால்பூர் ஆகிய இரு ரயில் நிலையங்களிலும், ஒரு ரயில் செல்லும் போது, மற்றொரு ரயில் கடந்து செல்வதற்கு ஏற்ப மாற்றுப்பாதை உள்ளது.

இதுபோன்ற நேரங்களில், ஒரு நடைமேடையில் இருந்து, மற்றொரு நடை மேடை ரயில் பயணியர் கடந்து செல்ல முடியாத அளவிற்கு, இடையூறாக இருந்தது.

இந்த ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என, ரயில் பயணியர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை ஏற்று, ரயில்வே நிர்வாகம் வாலாஜாபாத் மற்றும் திருமால்பூர் ஆகிய இரு ரயில் நிலையங்களில், இரண்டு ஆண்டிற்கு முன் நடைமேம்பாலம் கட்டும் பணிகள் துவக்கி, சமீபத்தில் நிறைவு செய்துள்ளனர்.

இதில், இரண்டாவது நடைமேடையில் இருப்பவர்கள் முதல் நடைமேடைக்கு செல்வதற்கு படிகளின் வழியாக ஏறி செல்லும்போது, நடை மேம்பாலயோரம் ஆபத்தான பள்ளம் இருப்பதால் தவறி விழும் அபாயம் உள்ளது.

எனவே, நடைமேம்பாலம் அருகே தடுப்பு மற்றம் சாய்தளத்தை அமைக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு பயணியர் இடையே எழுந்துள்ளது.

Advertisement