36 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று தற்காலிகமாக ரத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டதில், 36 வாகனங்களுக்கு தகுதி சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும், 47 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 304 வாகனங்கள், காஞ்சிபுரம் அடுத்த பரந்துார் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் சப் கலெக்டர் ஆஷிக் அலி தலைமையில், டி.எஸ்.பி., சங்கர் கணேஷ், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்ட குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் உள்ள இருக்கைகள், அவசர உதவி கதவுகள், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள், உள்ளிட்டவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், ஆய்வு செய்யப்பட்ட 304 தனியார் பள்ளி வாகனங்களில் 283 வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கப்பட்டது. சிறு சிறு குறைபாடு இருந்த 21 வாகனங்களுக்கு தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, வாகனத்தை முழுமையாக சரி செய்து கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வடமங்கலம் தனியார் கல்லுாரி மைதானத்தில், 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகளை, ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., பாலாஜி, டி.எஸ்.பி., கீர்த்திவாசன், வட்டார போக்குவரத்து அலுவலர் விஜயகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, வேக கட்டுப்பாடு கருவி, அவசரகால கதவு வேலை செய்யாத 15 பள்ளி பேருந்துகளின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. வாகனத்தை முழுமையாக சரி செய்து கொண்டு வர வேண்டும், என, வட்டார போக்குவரத்துறை அலுவலகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement