கோவில்களுக்கான எதிர்கால திட்டம் என்ன? முதல்வர் விஜய்க்கு ஹிந்து முன்னணி கேள்வி

5

திருப்பூர்: ''தமிழக முதல்வர் வெளியிட உள்ள வெள்ளை அறிக்கையில், ஹிந்து கோவில்களின் வருவாய், சீரமைப்பு மற்றும் எதிர்கால திட்டம் குறித்த முழுமையான தகவல்களை வெளியிட வேண்டும்,'' என, ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய், மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட போவதாக கூறியுள்ளதை வரவேற்கிறோம். ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு குறித்து, விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஹிந்து கோவில்களின் வருவாய், சீரமைப்பு மற்றும் எதிர்கால திட்டம் குறித்தும் அதில் தெரிவிக்க வேண்டும். கடந்த தி.மு.க., ஆட்சியில் 3,000 கோவில்களில் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடந்தது. பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு, அதில் அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளனர்.


கோவில் நிலங்களையும், வீடுகளையும் முறைகேடாக தனியாருக்கும், அரசு துறைகளுக்கும் தாரைவார்க்க, அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டனர். தி.மு.க. - அ.தி.மு.க., ஆட்சியில், சிலைகள், கோவிலின் புனித பொருட்கள், பழைமையான விக்ரஹங்கள் கடத்தப்பட்ட வழக்குகளின் நிலை என்ன?

கடத்தப்பட்ட சிலைகளை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால் தான், ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழலுக்கு துணை போகாமல், உண்மையாக, நேர்மையாக இறைவனுக்கு பணி செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement