சாலையை மறித்து நிற்கும் ஆட்டோக்களால் இடையூறு

திருப்போரூர்: திருப்போரூர் பகுதியில் சாலையை மறித்து நிற்கும் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக பயணியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் காவல் நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் வழியாக, தாம்பரம், குன்றத்துார், பிராட்வே, தி.நகர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு தடம் சார்ந்த, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகின்றன.

கேளம்பாக்கம், தையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர், மேற்கண்ட பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்று வருகின்றனர்.

இந்த பேருந்து நிறுத்தத்தில் சில, ஆட்டோக்கள் நீண்ட நேரமாக சாலையை மறித்து நிற்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

இதனால் பேருந்து ஓட்டுநர்கள் பயணியரை ஏற்றுவதில் சிரமப்படுகின்றனர்.

மேலும், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியரும் அவதிப்படுகின்றனர். அந்த வழியாக செல்லும் மற்ற வாகனங்களுக்கும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

எனவே, போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement