வடிகால் வசதி இன்றி கம்பத்தில் ரோட்டில் தேங்கும் கழிவுநீர்
கம்பம்: கம்பத்திலிருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் ரோடு, நூலக வீதியிலும் சாக்கடை கழிவு நீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் ரோட்டில் குளம் போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகரில் மக்கள் தொகைக்கு ஏற்ப துப்புரவு பணிகளை மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள் இல்லை.
குப்பை அள்ளும் பணி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளில் தொடர்ந்து தேக்கநிலை நிலவுகிறது. 33 வது வார்டு கக்கன் காலனியில் கழிவு நீர் செல்ல வடிகால் வசதி செய்ய வில்லை.
500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஆங்கூர்பாளையம் ரோட்டில் குளம் போல தேங்கி நிற்கிறது.
ரோட்டில் செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தி செல்லும் அவலம் தொடர்கிறது.
சாக்கடை கழிவு நீர் செல்ல தேவையான வடிகால் வசதி செய்யவில்லை.
அரசு மருத்துவமனைக்கு பின்புறம் நூலகம் அமைந்துள்ள வீதியிலும் சாக்கடை கழிவு நீர் ரோட்டில் செல்லும் அவல நிலை உள்ளது.
தியாகி வெங்கடாச்சலம் தெருவில் சேகரமாகும் கழிவு நீர் நெடுஞ்சாலையில் காந்தி சிலை அருகில் தேங்கி நிற்கிறது.
நகராட்சி நிர்வாகம் இந்த இடங்களில் கழிவு நீர் வடிகால் அமைத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.