21ல் அகில இந்திய கூடைப்பந்து போட்டி

கரூர்:''அகில இந்திய கூடைப்பந்து போட்டி, வரும், 21ல் கரூரில் தொடங்குகிறது,'' என, கரூர் கூடைப்பந்து குழு தலைவர் பாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் கூடைப்பந்து குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தனியார் ஓட்டலில் நடந்தது.

அதில், தலைவர் பாஸ்கர் பேசியதாவது:கரூர் கூடைப்பந்து கிளப் சார்பில், எல்.ஆர்.ஜி., நாயுடு சுழற்கோப்பைக்கான, 66வது ஆண்டு, அகில இந்திய கூடைப்பந்து போட்டி வரும், 21ல் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கி, 26 வரை நடக்க உள்ளது.

லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடக்க உள்ள கூடைப்பந்து போட்டியில் சென்னை ஐ.ஓ.பி., அணி, லோனா விலா இந்தியன் நேவி அணி, இந்தியன் ஏர்போர்ஸ் அணி, கேரளா போலீஸ் அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, திருவனந்தபுரம் கே.எஸ்.இ.பி., அணி, பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணி, புதுடெல்லி இந்தியன் நேவி அணி ஆகிய எட்டு ஆண்கள் அணியும்.பெண்கள் பிரிவில் ஹூப்ளி சவுத் வெஸ்ட்ரன் ரயில்வே அணி, சென்னை சதர்ன் ரயில்வே அணி, திருவனந்தபுரம் கே.எஸ்.இ.பி., அணி, கொல்கட்டா நார்த் ஈஸ்ட்ரன் ரயில்வே அணிகளும் பங்கேற்க உள்ளன. அதில், 96 ஆண் வீரர்களும், 48 பெண் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

முதல் பரிசாக, 75,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 40,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 30,000 ரூபாய், நான்காவது பரிசு, 20,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.


மேலும், பரிசு கோப்பை, சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். 3,000 பேர் அமரும் வகையில், கேலரி அமைக்கப்படுகிறது. வரும், 21ல் போட்டி தொடக்க விழாவில், கரூர் மாநகராட்சி ஆணையாளர் சுதா பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், கூடைப்பந்து போட்டியின் போது கரூர் மாவட்டத்த சேர்ந்த வீரர், வீராங்கனைகள், (2025-26ல்) தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று, பார்ம்-1 பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு விழா நடக்கிறது. தகுதி வாய்ந்த வீரர்கள், 98433-47862 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட கூடைப்பந்து குழு செயலாளர் முகமது கமாலுதீன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement