முதல்வர் விஜய் அமைச்சரவையில் அ.தி.மு.க.,வினருக்கு இடம் உண்டா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கோவை: ''முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அமைச்சரவையில், அ.தி.மு.க.,வினர் இடம் பெறுவதாக நாங்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை,'' என, நிதியமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கோவையில் நிதியமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழக வெற்றிக் கழகம் அரசின் ஊழலற்ற ஆட்சியை பொறுத்திருந்து பாருங்கள். கஜானா காலியாக இருந்தாலும், நெருக்கடியை சமாளிக்கும் திறமை முதல்வர் விஜய்க்கு உள்ளது.

பொருளாதார நிலை குறித்து படிப்படியாக ஆய்வு செய்து தான் தெளிவான விளக்கத்தை தர முடியும். ஆட்சியமைந்த உடனேயே, 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப் பொருள் ஒழிப்பு, 717 டாஸ்மாக் கடைகள் மூடல், பெண்களுக்கு பாதுகாப்பு ஆகியவற்றை செயல்படுத்தியது பெரும் சாதனை.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியால் அக்கட்சி வலுவிழந்து விட்டது. 'தான் ஒருவன் மட்டும் இருந்தால் போதும்' என பழனிசாமி நினைக்கிறார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஏழு அமைச்சர்கள் தான் முதலில் இருந்தனர். பின் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது ஒன்பது அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, முதல்வர் விஜய் முடிவு செய்வார். அதில், அ.தி.மு.க.,வினர் எத்தனை பேர் இடம் பெறுவர் என்பது குறித்து, நாங்கள் எதுவும் இதுவரை சொல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement