த.வெ.க., ஆட்சியும் திராவிட ஆட்சி தான்: அடித்து சொல்கிறார் கமல்

65

மதுரை: ''தமிழகத்தில் இருந்து ஒருவர் கட்சி ஆரம்பித்து, ஆட்சி நடத்தினால், அது திராவிட ஆட்சி தான்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்தார்.

மதுரை கருமாத்துாரில் நடைபெறும் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் பட தொடக்க விழாவில் பங்கேற்க, சென்னையில் இருந்து மதுரைக்கு கமல் சென்றார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: முதல்வர் விஜயின் ஆட்சி குறித்து, இரு நாட்களில் கருத்து சொல்வது, ஜோதிடமாக தான் இருக்க முடியும்.

அவருக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும். புதியவர்கள் நிறைய பேர் வந்துள்ளனர். புதியவர்களை, 'கம்மி'யாக எடை போட வேண்டாம்; அதிகமாக எதிர்பார்க்கவும் வேண்டாம்.

மக்களாகிய நீங்கள் தான், விஜய்க்கு ஓட்டு போட்டீர்கள். அவர்களை நீங்கள் தான் கண்காணிக்க வேண்டும்; நாங்களும் கண்காணிக்கிறோம். தமிழகத்தில், திராவிட கட்சி இல்லாத, ஒரு புதிய கட்சி ஆட்சி அமைத்து இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் இருந்து ஒருவர் கட்சி ஆரம்பித்து ஆட்சி நடத்தினால், அது திராவிட ஆட்சி தான்.

'கமல் முதல்வராக வந்தால் கூட பொறாமைப்பட மாட்டேன்' என, ரஜினி கூறியுள்ளார். நாங்கள் இருவரும் போட்டி போடுவோம்; அது பொறாமை கிடையாது. நாங்கள், 'பெஸ்ட் ஸ்போர்ட்ஸ் மேன் இன் தமிழ்நாடு!' விளையாட்டுத்துறையில் இருந்திருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்போம்.

அ.தி.மு.க.,வில் நடைபெறும் உட்கட்சி விவகாரங்களை, உங்களை போல நானும் வேடிக்கை பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement