உத்தரபிரதேசத்தில் வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 10 பேர் பரிதாப பலி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் வேன் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ் சாலையில் வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 10 பேரில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் இந்த துயர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

இன்று காலை 7:10 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். வேன் டிரைவர் அதிவேகமாக இயக்கியதால் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது தான் விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement