சில வாரங்களுக்கு ஓய்வு: தி.மு.க., 'மாஜி' அறிவிப்பு

9

மதுரை: மதுரை மத்தி தொகுதியில், கடந்த 2016, 2021 தேர்தல்களில் வென்ற தி.மு.க., முன்னாள் அமைச்சர் தியாகராஜன், இந்த தேர்தலில், த.வெ.க., வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாக நேற்று அறிவித்தார்.

இது குறித்து தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை: ஒரு எம்.எல்.ஏ.,வாக, 10 ஆண்டுகள் நேரம் பார்க்காமல் உழைத்தேன். தற்போது, என் முழு நேரத்தையும் எவ்வாறு செலவிட வேண்டும் என நானே தீர்மானிக்கும் சுதந்திரத்துடன், சில வாரங்கள் ஓய்வை எதிர்நோக்கி இருக்கிறேன். முன்பு, நேரமின்மையால், நாடு முழுதும் சென்று உரையாற்றும் வாய்ப்புகளை மறுத்தேன். தற்போது, அவற்றை ஏற்க முடியும்.

அமைச்சராக இருந்தபோது வெளிநாடுகளுக்கு சென்று உரையாற்ற வந்த அழைப்புகளுக்கு, எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த ஓய்வு காலத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று உரையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு பதிப்பகத்துடன், நான் ஒப்பந்தம் செய்துள்ள புத்தகத்தை எழுதுவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

எனக்கு 60 வயது நிறைவடைந்து உள்ளதால், அதற்கேற்ப என் உடல் நலத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும் விரும்புகிறேன்.புத்துணர்ச்சியுடனும், புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும் மீண்டும் வருவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement