எலவக்கரை குளத்துக்கு தண்ணீர் திறப்பு 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து, எலவக்கரை குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள எலவக்கரை குளம், 11.34 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. குளத்தின் வாயிலாக, 250 ஏக்கர் பாசனம் பெறுகிறது.

எலவக்கரை குளம் நிரம்புவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வழித்தடத்தில் உள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்ட நீராதாரங்களில் நீர்மட்டம் உயரும் என கூறப்படுகிறது. இந்த குளத்துக்கு அரசு உத்தரவுப்படி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டம், ஆனைமலை தாலுகா ஆழியாறு அணையில் இருந்து எலவக்கரை குளத்தை நிரப்புவதால், அதன் ஆயக்கட்டு பகுதியில் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றுவதற்கும்; பாலாற்றில் தண்ணீர் கொண்டு செல்வதால், ஜல்லிபட்டி, துறையூர், கம்பாலபட்டி, கரியாஞ்செட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.

இதனால், குடிநீர் தேவைகள் மறைமுகமாக பூர்த்தி செய்வதற்கும், ஆழியாறு அணையில் இருந்து, நேற்றுமுன்தினம் முதல், 29ம் தேதி வரை, 11 நாட்களுக்கு வினாடிக்கு, 61.00 கன அடி வீதம் மொத்தம், 58.00 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement