குப்பைகள் அகற்றும் பணி :ஆணையர் ஆய்வு 

புதுச்சேரி: திருக்கனுாரில் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் குப்பைகள் அகற்றும் பணியினை ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்தார். 

 புதுச்சேரி முழுதும் வீடு வீடாக குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆதார்ஷ் உத்தரவின் பேரில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், திருக்கனுார், கூனிச்சம்பட்டு, செல்லிப்பட்டு ஆகிய கிராமங்களில் வீடு,வீடாக குப்பைகள் அகற்றும் பணியினை கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அப்பகுதி மக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குப்பைகளை சாலையோரங்களிலோ, காலி மனைகளிலோ வீச கூடாது. குப்பையை எடுப்பதற்கான வாகனம் வரும்போது துப்புரவு பணியாளர்களிடம் மட்டுமே கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

மேலும், துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக அகற்ற வேண்டுமென உத்தரவிட்டார். இதில் கொம்யூன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர். 

 

Advertisement