லாரி மீது பைக் மோதி இரு இளைஞர்கள் பலி

பாலக்காடு: பாலக்காடு அருகே, லாரி மீது பைக் மோதி, இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

​கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், குனிச்சேரி செங்காரம் பகுதியை சேர்ந்தவர்களான சூர்யாவின் மகன் சுபாஷ், 22, சுந்தரனின் மகன் சுகில், 18, வாசுவின் மகன் ரஜீஸ், 21. இவர்கள் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், செங்காரத்தில் இருந்து ஆலத்துார் நோக்கி, பைக்கில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது லேசாக மோதிவிட்டு, பின்னர் மரத்துாள் ஏற்றிக்கொண்டு, கொடுவாயூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியின் அடியில் பாய்ந்தது. அப்பகுதி மக்கள், லாரியின் அடியில் சிக்கியிருந்த சுகில் மற்றும் ரஜீஷை மீட்டு, உடனடியாக ஆலத்துார் இரட்டக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ரஜீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தீவிர சிகிச்சை அளிப்பதற்காக, சுகிலை திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

​லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட சுபாஷை, ஆலத்துார் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்டு, ஆலத்துார் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்கு செல்லும் முன்பே, சுபாஷ் உயிரிழந்தார். ​இந்த விபத்து குறித்து, ஆலத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலத்தூர் தாலுகா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு இருவரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement