மீனாட்சி அம்மன் அலங்காரத்தில்வெண்டாங்கி ஜோதி மாரியம்மன்
சேந்தமங்கலம்:சித்திரை திருவிழாவையொட்டி, வெண்டாங்கி ஜோதி மாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில், சித்திரை திருவிழா நடந்து வருகிறது. அதன்படி, கொல்லிமலை சாலை, வெண்டாங்கி கிராமத்தில் அமைந்துள்ள ஜோதி மாரியம்மன் கோவிலில், சில நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை, சாமி காடு பகுதியில் இருந்து மேளதாளம் முழங்க பால்குட ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து, நேற்று மாலை பொங்கல் மாவிளக்கு பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்த சிறப்பு பூஜையில், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் ஜோதி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாட்டை, வெண்டாங்கி நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.