துார்வாரியும் தண்ணீர் தேக்க முடியாத அருங்காட்டு குளம்
கொடைக்கானல்:கொடைக்கானல் அருங்காட்டுகுளம் துார்வாரியும் கூடுதல் தண்ணீர் தேக்க முடியாத நிலையில் விவசாய பரப்பும் சுருங்கி உள்ளது.
பூண்டி ஊராட்சி அருங்காட்டுகுளம் 15 ஏக்கரில் உள்ளது. இதன் முக்கிய நீராதாரமாக கீழ்மடைபள்ளம் உள்ளது. இக்குளம் மூலம் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 2020 ல் குடிமராமத்து பணியில் ரூ. 50 லட்சத்தில் குளம் தூர்வாரப்பட்டது. பெயரளவிற்கு நடந்த பணியில் குளம் முழுமையாக தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். கரையை உயர்த்ததால் கூடுதல் தண்ணீர் தேக்க முடியாமல் கோடையில் ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெறுகிறது. எஞ்சியுள்ள நிலங்கள் தரிசாக உள்ளது. கான்கிரீட் வாய்க்கால்கள் கட்டமைக்க கோரிக்கை விடுத்தும் கிடப்பில் உள்ளது. பொதுப்பணித்துறையினர் குளத்தை துார்வாரி கூடுதல் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரையை உயர்த்தலாமே
கோபால், விவசாயி, பூண்டி: பூண்டி அருங்காட்டுகுளம் ரூ. 50 லட்சத்தில் குடிமராமத்து பணியில் தூர்வாரியும் பலனில்லை. தொடர்ந்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதியின்றி தரிசாக உள்ளது. இந்நிலையை தவிர்க்க பொதுப்பணித்துறை மேலும் 5 அடி உயர்த்தும் நிலையில் கூடுதல் தண்ணீர் தேக்க முடியும். இதன் மூலம் 1500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயம் புத்துயிர் பெறும். அதே நேரத்தில் குளத்தின் நீராதாரமாக உள்ள கீழ்மடை பள்ளம் குளம் தண்ணீர் வரத்து வாய்க்காலில் 5 கி.மீ., துாரத்திற்கு கான்கிரீட் அமைக்க வேண்டும்.