59 ஆண்டுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்; முதல் முறையாக இணைகிறது முஸ்லிம் லீக்

25

புதுடில்லி; காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இணைவர். நாளை அவர்கள் பதவியேற்கின்றனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முஸ்லிம் லீக் கட்சியும் அமைச்சரவையில் இணைகிறது.

தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசில் காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு அளித்து உள்ளது. அக்கட்சிக்கு அமைச்சரவையில் நிச்சயம் இடம் உண்டு என்று கூறப்பட்டு வந்த நிலையில் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவரங்கள் வெளியாகாமல் இருந்து வந்தன.

இந் நிலையில் தவெக அமைச்சரவையில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் அமைச்சர்கள் ஆகின்றனர் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது;

காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இடம்பெற ஒப்புதல் அளித்துள்ளார். இவர்கள் இருவரும் நாளை அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர்.

59 ஆண்டுகள் எனும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் மீண்டும் இணையும் இந்த தருணம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக் நிகழ்வு.

தமிழக மக்களின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் அவர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள். ராகுல் வகுத்து தந்திருக்கும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை செயல்படுத்த அயராது உழைப்பார்கள்.

இவ்வாறு அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களாக பதவி ஏற்கும் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் கிள்ளியூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். மற்றொருவரான விஸ்வநாதன் மேலூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்த போது மேலூர் தொகுதி வேட்பாளர் பெயர் தான் கடைசியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் நாளான மே 4ம் தேதி முதல் வெற்றியாளராக மேலூர் தொகுதி முடிவுகள் தான் அறிவிக்கப்பட்டது.

முஸ்லிம் லீக்

இதேபோல, வெளியில் இருந்து ஆதரவு என்று அறிவித்திருந்த முஸ்லிம் லீக் கட்சியும் அமைச்சரவையில் இணைகிறது. 2 எம்எல்ஏ.,க்களை கொண்டுள்ள முஸ்லிம் லீக் சார்பில் யார் அமைச்சராக பதவியேற்பர் என்பது நாளை அறிவிக்கப்படும் என்று மாநில தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.


@block_P@

உத்வேகம்

சென்னையில் நிருபர்களிடம் காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியதாவது: தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் காங்., எம்எல்ஏக்கள் இடம்பெறுகின்றனர். அமைச்சரவையில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த துறை வழங்கினாலும் மகிழ்ச்சிதான். காங்., தொண்டர்களுக்கு இது உத்வேகம் அளிக்கும், என்றார்.block_P

Advertisement