யு – 9 மாநில சதுரங்க போட்டி சென்னை சிறுவன் ‘சாம்பியன்’

சென்னை: மாநில அளவில், ஒன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான சதுரங்க போட்டியில், சென்னை சிறுவன் சித்தார்த் அனுஜ் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.

செங்கல்பட்டு சதுரங்க சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் இணைந்து, 38வது மாநில யு– 9 செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை, தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில், பெரி கல்வி குழும கல்லுாரியில் நடத்தின. ஐந்து நாட்கள் நடந்த இப்போட்டியில், மாநிலம் முழுதும் இருந்து 400க்கும் மேற்பட்ட சிறுவர் – சிறுமியர் பங்கேற்றனர்.

முதல்நாள் போட்டியை, அகில உலக சதுரங்க கழக முன்னாள் துணைத் தலைவர் சுந்தர், மாநில சதுரங்க கழக செயலர் ஸ்டீபன் பாலசாமி, பெரி கல்லுாரி செயல் அலுவலர் சாய் வீரராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஒன்பது சுற்றுகள் அடிப்படையில், சிறுவர்கள் பிரிவில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த் அனுஜ் முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் வென்றார். புதுக்கோட்டையைச் சேர்ந்த தாரகன் இரண்டாம் இடத்தையும், கோவையைச் சேர்ந்த இன்ப தினேஷ் பாபு மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

சிறுமியர் பிரிவில், மதுரையைச் சேர்ந்த ஆரண்யா சாம்பியன் பட்டம் வென்றார். சென்னையைச் சேர்ந்த த்ரிஷா இரண்டாவது இடத்தையும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆஷ்ரிதா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement