மகளிர் கால்பந்தில் ‘தெறிக்க விட்ட’ லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி
சென்னை: மகளிர் கால்பந்து லீக் போட்டியில், லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினர் கோல் மழை பொழிந்து தெறிக்க விட்டனர்.
சென்னை கால்பந்து சங்கம் சார்பில், சென்னை மண்டல அளவில் மகளிருக்கான கால்பந்து லீக் போட்டி, சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.
அந்த வகையில், சென்னை டான் போஸ்கோ மைதானத்தில் நடந்த ‘ஏ’ மண்டல லீக் போட்டியில், லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, ராணி மேரி கல்லுாரி அணியை எதிர்த்து மோதியது. போட்டி துவங்கிய அடுத்த நிமிடமே லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சாதனா தன் அணிக்காக முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, அந்த அணி வீராங்கனையர் அடுத்தடுத்து கோல்கள் அடித்து தெறிக்க விட்டனர்.
எதிரணியின் தடுப்பை தகர்க்க முடியாமலும், அட்டாக் வீராங்கனைகளை தடுக்க முடியாமலும் ராணி மேரி கல்லுாரி அணி தடுமாறியது. லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சாதனா, விஜயா, பூஜாஸ்ரீ தலா இரண்டு கோல்கள் அடித்தனர். சர்மிளா, வித்யா, ஸ்ரீமதி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.
போட்டி முடிவில் லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 9 – 0 என்ற கோல் கணக்கில் ராணி மேரி கல்லுாரி அணியை வீழ்த்தி அசத்தியது.