போக்குவரத்து அதிகாரிகள் தாமதம் ;காத்திருந்த வாடிக்கையாளர்கள்
திருமங்கலம்: திருமங்கலம் ஆர்.டி.ஓ., கிளை அலுவலகத்தில் திருமங்கலம், பேரையூர், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி பகுதி வாகனங்கள் தரச்சான்று ஓட்டுநர்களுக்கு லைசென்ஸ் புதிய வாகனங்களுக்கு பதிவு உள்ளிட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வாகன பதிவு புதுப்பிக்க நுாற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் வந்துள்ளனர்.
அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் மதியம் 1:00 மணிக்கு சாப்பிட சென்றுள்ளனர். மதியம் 3:00 மணி ஆகியும் யாரும் வரவில்லை. இதனால் காத்திருந்த வாகன உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். அதேநேரம் சாப்பிட்டு ஓய்வெடுத்த பின்பு பணிகளை கவனிக்க வாகன ஆய்வாளர் சங்கீதா அறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். காத்திருந்த வாகன ஓட்டிகள் அவரிடம் கேள்வி எழுப்பியவாறு வீடியோ எடுத்தனர். அவர் பதில் சொல்லாமல் சென்று விட்டார். இந்த வீடியோ விரைவாக வைரலானது.
வாகன ஆய்வாளர் சுகந்தி கூறியதாவது : திருமங்கலம் ஆர்.டி.ஓ., கிளை அலுவலகத்திற்கு தனியாக ஆய்வாளர் இல்லை. உசிலம்பட்டியில் இருந்து நான் இங்கு கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறேன். இங்கு தினமும் அதிகளவில் வாகனங்கள் வருகின்றன. எனவே வாகனங்களை தணிக்கை செய்து அனுப்புவது, ஓட்டுனர் லைசன்ஸ் அளிப்பதில் தாமதம் ஏற்படும்.
நேற்று முன்தினம் மதியம் 'கம்ப்யூட்டர் சர்வர்' முழுமையாக வேலை செய்யாததால் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இயலாமல் போனது. இதனால் காத்திருந்தவர்களிடம் மதிய உணவுக்குப் பின் தாமதமாக வருமாறு அறிவுறுத்தினோம். இந்நிலையில் போதிய ஆவணம் இல்லாததால் சான்றிதழ் பெற இயலாத ஒருவர், உள்நோக்கத்துடன் வீடியோ எடுத்து வைரலாக்கி விட்டார் என்றார்.