சிமென்ட் உற்பத்தி குறைப்பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எரிபொருள் விலை உயர்வால் பாதிப்பு

சென்னை:பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால், சிமென்ட் உற்பத்தியை குறைக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

நாட்டில் சிமென்ட் உற்பத்தியில், ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 26 ஆலைகள் வாயிலாக, 4.86 கோடி டன் சிமென்ட் தமிழகத்தில் தயாரிக்கப்படுகிறது.

கட்டுமான திட்டங்கள் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் சிமென்ட் தேவை ஆண்டுக்கு, 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் வைத்து, தயாரிப்பு திறனை ஆலைகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் மேற்காசிய பிரச்னை காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வருவது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, ஏப்., 1 முதல் சிமென்ட் விலையை மூட்டைக்கு, 50 ரூபாய் வரை உற்பத்தியாளர்கள் உயர்த்தினர். அதன் பின்னும், உற்பத்தி செலவு வெகுவாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, எரிபொருள் செலவு, 28 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், சிமென்ட் உற்பத்தியை குறைக்க, நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அகில இந்திய அளவில், இதற்கான முடிவுகளை எடுத்துள்ளன.

இதை பின்பற்றி, தமிழக நிறுவனங்களும் உற்பத்தியை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில் தமிழக பிரிவு துணை தலைவர் மணி சங்கர் கூறுகையில், “தமிழகத்தில் சிமென்ட் விலை உற்பத்தியாளர்களால், மூட்டைக்கு, 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. ஆனால், சில்லரை விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.

''இதனால், பொது மக்கள் ஒரு மூட்டைக்கு, 80 ரூபாய் வரை கூடுதலாக கொடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், உற்பத்தி குறைந்தால், சந்தையில் சிமென்ட் தட்டுப்பாடு அதிகரிக்கும், இது மீண்டும் அடுத்த விலை உயர்வுக்கு வழிவகுக்கும். வீடு கட்டுவோருக்கும், புதிதாக வீடு வாங்குவோருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும், ” என்றார்.

* ஏப்., 1 முதல் சிமென்ட் விலை மூட்டைக்கு, 50 ரூபாய் வரை உயர்வு

* சில்லரை விலையில் மூட்டைக்கு ரூ.80 வரை கூடுதலாக வைத்து விற்பனை

* எரிபொருள் செலவு 28% உயர்வால், சிமென்ட் விலை மேலும் உயரும் அபாயம்.

Advertisement