அரசு துறைகளில் கோவில் நிதி முதலீடு எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை: தமிழக கோவில் நிதியை, மற்ற அரசு துறைகளில் முதலீடு செய்ய அனுமதித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கோவில்களின் உபரி நிதியை, தமிழக அரசின் நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில், அறநிலையத் துறை சட்டத்தின் முதலீட்டு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான அரசாணை, பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், கோவில் நிதியை வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை விதிக்கக் கோரியும், சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ரவு சேஷாத்ரி, வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் ஆஜராகி, '2,700 கோடி ரூபாய் கோவில் நிதி, சட்டவிரோதமாக அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, வாதிட்டனர்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகம், ரிசர்வ் வங்கி ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டனர்.