பெற்றோருடன் சென்ற கணவரால் பாதிக்கப்பட்ட பெண் மனு

ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம் மரப்பாலம் சாலையை சேர்ந்த அரசு ஊழியரான, 29 வயது பெண் ஒருவர், நேற்று அவரது தந்தையுடன் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

நான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளேன். அரசு துறையில் வேலை பார்க்கும்போது, அங்கு வந்து சென்ற முள்ளாம்பரப்பை சேர்ந்த தனியார் பார்சல் நிறுவனத்தில், மேலாளராக பணியாற்றிய சந்தோஷ், 25, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. எனக்கு திருமணமாகி விவாகரத்து பெற்றதையும், அதற்கான ஆதாரங்களையும் சந்தோஷிடம் காண்பித்தேன். அவர் என்னை திருமணம் செய்ய சம்மதித்தார்.


ஆனால், அவரது பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து கடந்த மார்ச், 16ல், கருங்கல்பாளையம் ரங்கபவனத்தில் திருமணம் செய்து கொண்டோம். எனது வீட்டிற்கு நாங்கள் வந்தோம். அடுத்த, 2 மணி நேரத்தில் என் கணவர் சந்தோஷின் பெற்றோர், அவரது தாய்மாமா ஆகியோர் எங்களிடம் வந்து பேசி, திருமண வரவேற்பு விழா நடத்த ஏற்பாடு செய்வதாக பேசினர். எனது கணவரை வீட்டு வாசல் வரை அழைத்து சென்று பேசினர். சில நிமிடங்களில் அவர் சொல்லாமல் பெற்றோருடன் சென்று விட்டார்.
கணவரை என்னுடன் வாழ வருமாறு பலமுறை கூறியும் அவர் வரவில்லை. ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷன், தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எவ்வித காரணமும் இன்றி, வாழ விருப்பமில்லை என்கிறார். ஜாதியை காரணம் சொல்லி பெற்றோர் அழைத்து சென்றதால் அவர்கள் மீதும், திருமணம் செய்து வாழ மறுக்கும் சந்தோஷ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தோஷை விட்டு சென்றால், அவரது தாய்மாமன் பணம் தருவதாக கூறுகிறார். அவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement