மக்கள் அதிகம் கூடும் இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

கமுதி: கமுதி-–சாயல்குடி ரோடு கோயில், பெண்கள் பள்ளி உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஜாரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி, பஸ் ஸ்டாண்ட், கோயில் பகுதியில் உள்ள 29 டாஸ்மாக் கடைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டு ஒவ்வொரு கடையாக மூடி வருகின்றனர். கமுதி - சாயல்குடி ரோடு பஜாரில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகே கோயில், சர்ச், பள்ளி வளாகம் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடை அருகே கூட்டமாக அமர்ந்து மது அருந்தி வருவதால் மக்கள், மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.

இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மக்களின் நலன் கருதி பஜாரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தனர். மக்கள் கூறியதாவது:

கமுதி பஜாரில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இதன் அருகில் முத்துமாரியம்மன், மீனாட்சி அம்மன், சர்ச், ஆண்கள்,பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடத்தில் டாஸ்மாக் கடை உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அச்சத்திலேயே மக்கள் உள்ளனர்.

தமிழக அரசு தற்போது செயல்படுத்தி வரும் டாஸ்மாக் கடையை அகற்றும் பணியில் கமுதி பஜாரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை ஒன்று திரட்டி கமுதி- சாயல்குடி ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

––

Advertisement